வீடியோ ஸ்டோரி

நாகை: வேதாரண்யத்தில் கனமழை காரணமாக உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

Sinekadhara

வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி உற்பத்தி செய்த உப்பு நீரில் கரைந்து சேதமடைந்து வருகிறது. 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை உள்ளிட்டப் பகுதிகளில் மூவாயிரம் ஏக்கரில் சாப்பாட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையால் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள உப்பளங்கள் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 25.2 செமீ மழை பெய்துள்ளது. மழைக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட 5000 டன் உப்பு, உப்பளங்களின் மேட்டுப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உப்பு மழைநீரில் கரைந்து வருகிறது.

இதனால் மழையை பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக லாரிகள் மூலம் வெளியூருக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மழையால் உப்பு உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது ஒரு டன் உப்பு 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.