வீடியோ ஸ்டோரி

18 சதவீதமாக அதிகரித்த ஜிஎஸ்டி: கோவையில் மூடுவிழா காணும் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலைகள்

JustinDurai
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக அதிகரித்த நிலையில், தொடர் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல், கோவையில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுதும் 6 ஆயிரம் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ள நிலையில், ஆயிரம் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் உள்ளன. கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து விற்கும் 1,200 கடைகளிலிருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு 350 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் கொரோனாவிற்கு முன் 200 டன் நாள்தோறும் மறுசுழற்சி செய்து வந்த நிலையில், தற்போது மறுசுழற்சி 100 டன்னாக குறைந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை 60 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை உயர்ந்தது தொழிலை நெருக்கடிக்கு தள்ளிய நிலையில், சாதாரண பிளாஸ்டிக் போலவே மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்களுக்கும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., குறியீட்டு எண்ணான HSN CODE, பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு என்று தனியாக இல்லாததால் கூடுதல் சுமைக்கு உள்ளாகி வருவதாக கூறுகின்றனர் கோவை பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 முதல் 500 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. ஆனால் மொத்த உற்பத்தியில் 10-15 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது தற்சமயம் சாத்தியமில்லாத நிலையில், சுற்றுச்சூழல் மாசை ஓரளவிற்கு குறைக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் மூடுவது, பொருளாதார பாதிப்பு என்பதை கடந்து, சூழலியல் பாதிப்பு என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிறார்கள் இத்துறையினர்.