வீடியோ ஸ்டோரி

சென்னை பாண்டிபஜாரில் மல்டிலெவல் பார்க்கிங் - ஒரே நேரத்தில் 222 கார்களை நிறுத்தும் வசதி

PT WEB

சென்னை பாண்டிபஜாரில், சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கும்வகையில், மல்டி லெவல் பார்க்கிங் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வசதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சென்னையின் முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றான பாண்டிபஜாரில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது வழக்கமாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், மல்டி லெவல் பார்க்கிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்த வளாகத்தில் ஒரு தளத்தில் 37 வாகனங்கள் என்ற அளவில் 6 தளங்களில் 222 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. அதே போல 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் நவீன வாகன நிறுத்தம், பாதுகாப்பான முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து, வேண்டிய நேரத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வகையிலும், இணையவழியில் கட்டணம் செலுத்தும் வகையிலும் இந்த மல்டிலெவல் பார்க்கிங் செயல்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டமாக 2019 ஆம் ஆண்டு ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கொண்டுவரப்பட்டது. தி.நகர் பாண்டிபஜார், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடு, அண்ணாநகர், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட 30 இடங்களில் இந்த திட்டம் கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்த முடியாமல் தடைபட்டு போனது. தற்போது பாண்டிபஜாரில் செயல்படும் மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் அடுத்தடுத்து பிற பகுதிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.