இந்திய பண்பாட்டு பரிணாம ஆய்வுக்குழு மாற்றி அமைக்கப்படும் என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அறிவித்திருப்பது, 32 எம்பிக்களின் கோரிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டுகால பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வுசெய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடிகள், சிறுபான்மையினர், தென்னிந்தியர்களுக்கு இடமில்லை என்பது குறித்து கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தான் பேசியதாக வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். பண்பாட்டு பரிணாமக்குழுவை கலைக்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 எம்பிக்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதை வெங்கடேசன் சுட்டிக்காட்டி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, பண்பாட்டு் பரிணாமக்குழு மாற்றியமைக்கப்பட இருப்பதாக ஒன்றிய கலாசாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார் என்று வெங்கடேசன் கூறியிருக்கிறார்.