வீடியோ ஸ்டோரி

திருத்தணி எம்.எல்.ஏவிடம் பணம் பறிக்க முயன்ற தம்பதி கைது

கலிலுல்லா

உள்துறை டி.எஸ்.பி எனக்கூறி, திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் பணம் பறிக்க முயன்ற தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 25-ஆம் தேதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரனை தொலைபேசியில் அழைத்த நபர் ஒருவர், தான் தலைமைச் செயலகத்தில் உள்துறை டிஎஸ்பியாக இருப்பதாகவும், திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மீது புகார் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரை விசாரிக்காமல் இருக்க 25 லட்ச ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதால், அவரும் 25 லட்ச ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை மிரட்டி பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள் எனக் கருதிய திருத்தணி எம்.எம்.ஏ, இது குறித்து திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியவர்களை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, பணத்திற்கு அடியில் வெள்ளை தாள்களை வைத்து, எம்.எல்.ஏவின் உதவியாளர் பணத்தை கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, பணத்தை வாங்க வந்தவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது மனைவி யசோதாவுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தலைமைச் செயலகத்தில் டி.எஸ்.பி.ஆக இருப்பது போன்ற, போலி அடையாள அட்டை மற்றும் பத்தாயிரம் ரூபாய், கார் உள்ளிட்டவற்றை கைதானவர்களிடமிருந்து, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.