வீடியோ ஸ்டோரி

ஹோம் டூர் பார்த்து கொள்ளை முயற்சி? சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட யூ-ட்யூபர் suhail vlogger

webteam

கோவையில் யூ-டியூப் மூலம் அதிக பணம் ஈட்டியதாகக் கூறியதை கண்டு சம்மந்தப்பட்ட யூ-டியூபர் வீட்டில் திருட முயன்ற நபர் வசமாக சிக்கியுள்ளார்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவர், சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். சுஹைல், கோவை கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். இவர் தனது வீட்டில் நடக்கும் அன்றாட குடும்ப நிகழ்வுகள் மற்றும் அவரின் குழந்தை தொடர்பாக வீடியோக்களை தனது யூ-டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தனக்கு சொந்த வீடு, 2 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியாக வாழ்ந்து வருவதாக தனது யூ-டியூப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார் சுஹைல். இந்த நிலையில் மூன்று நாள்களுக்கு முன் காலை 6 மணிக்கு சுஹைலின் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே சுஹைல் கதவை திறந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியுடன் உள்ளே புகுந்தார்.

இதையடுத்து அவர், கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட சுஹைல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கே.ஜி.சாவடி காவல்துறையினர், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அனுராம் (25), என்பதும், யூ-டியூப் மூலம் சுஹைல் அதிக பணம் சம்பாதித்து உள்ளதும், அதை கொள்ளையடிக்கும் நோக்கில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.

அனுராம் நள்ளிரவு 1.30 மணியளவில் சுஹைலின் வீட்டுக்கு வந்து மாடியில் ஏறி இரவு முழுவதும் படுத்து தூங்கியுள்ளார். அவர் காலை 6 மணிக்கு எழுந்து வீட்டின் கதவைத் தட்டி கத்தியுடன் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கே.ஜி.சாவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அனுராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சிசிடிவி காட்சிகளையும் சுஹைல் தனது யூ-ட்யூப் பக்கத்தில் போட்டிருக்கிறார். 11 லட்சம் பார்வையாளர்கள் அதை பார்வையிட்டுள்ளனர்.