காரைக்குடியில், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி, பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய, அரசு போக்குவரத்து காரைக்குடி கிளை மேலாளர் சண்முகசுந்தரத்தை தனியார் பேருந்து ஓட்டுநர்களும், அதன் நேரக்காப்பாளரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரைக் கைது செய்யக் கோரி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணிநேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அளித்த உறுதியை அடுத்து அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.