வீடியோ ஸ்டோரி

சபரிமலையில் மகர ஜோதியை தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள்

கலிலுல்லா

சபரிமலையில் மகர ஜோதியை ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மகர ஜோதி தரிசனம் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்காக பந்தள அரண்மனையில் இருந்து 3 பெட்டிகளில் எடுத்துவரப்பட்ட திருவாபரணங்களை, பந்தள அரச குடும்ப உறுப்பினர், சபரிமலை தந்திரியிடம் ஒப்படைத்தார். ஆபரண பெட்டியில் இருந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டபின் நடை திறக்கப்பட்டது.

அரச கோலத்தில் பந்தள ராஜகுமாரனாக காட்சியளித்த ஐயப்பனுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது, வானில் மகர நட்சத்திரம் தோன்ற, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. உணர்ச்சிப் பெருக்கில் சபரிமலையை சுற்றியுள்ள 9 மலைக்குன்றுகளில் இருந்து சரணகோஷமிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், மகரஜோதியை தரிசனம் செய்தனர்.