அரியலூர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு டெல்லியிலுள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் தனியார் பள்ளியில் படித்துவந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு, மாணவியை பள்ளி நிர்வாகம் மதமாறக் கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை என்று ஒரு தரப்பினரும், ஆனால் விடுதிக் காப்பாளர் திட்டியதால்தான் தற்கொலை என மறுதரப்பினரும் கூறிவந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வீடியோவை மாணவியின் இறப்பிற்கு பிறகு பரப்புவதற்கு காரணம் என்னவென்று விசாரணையின்போது அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்ப்பட்டது. பொய்யான வீடியோ என்று கூறி, மாணவி அளித்த முழுமையான வாக்குமூலம் வெளியானது. இதையடுத்து மதமாற்றம் செய்யப்பட்டதாக பொய் குற்றச்சாட்டுகளை பரப்பியதாக பாஜக மாநில வினோஜ் பி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்ற ABVP அமைப்பினரை போலீசார் தடுத்துநிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.