வீடியோ ஸ்டோரி

பூனைக்குட்டிக்கு தாயாக மாறிய பொமரேனியன் நாய்: பாலூட்டி சீராட்டி வளர்க்கும் அதிசயம்

பூனைக்குட்டிக்கு தாயாக மாறிய பொமரேனியன் நாய்: பாலூட்டி சீராட்டி வளர்க்கும் அதிசயம்

JustinDurai

மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று பூனைக்குட்டிக்கு பாலூட்டி சீராட்டி வருகிறது. ஜெயபிரகாஷ் என்பவர் வெண்ணிலா என்று பெயர்சூட்டி வளர்க்கும் பொமரேனியன் நாய்க்குட்டி, அதே வீட்டிற்கு புதிதாக கொண்டு வரப்பட்ட பூனைக்குட்டிக்கு பாலூட்டுகிறது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மேலூர் அரசு மருத்துவமனை எதிரே வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வெண்ணிலா என பெயரிடப்பட்ட பொமெரியன் இன நாயொன்றை பாசத்துடன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பூனை வளர்ப்பின் மீது ஆர்வம் வந்ததால், ஒரு குட்டிப்பூனையை தனது வீட்டிற்கு தூக்கி வந்துள்ளார் ஜெயப்பிரகாஷ்.
பொதுவாக வீட்டில் யாரேனும் இருவர் சண்டை போட்டால், ‘நாயும் பூனையும் போல சண்டை போடுகிறியே’ என சொல்லிக் கேட்டிருப்போம். அந்தளவிற்கு நாய்க்கும் பூனைக்கும் ஒத்துப்போகாது என்பது, நம் கணிப்பு. ‘பூனையை கண்டால் நாய் துரத்தி, துரத்தி கடிக்கும். இதனால் பூனை, நாயை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்ளும்’ என்ற நம்முடைய இந்த புரிதலுக்கு ஜெயப்பிரகாஷின் இல்லத்தில் இடமில்லை.
ஜெயப்பிரகாஷ் வளர்க்கும் நாய், வீட்டுக்கு வந்த அந்தப் பூனைக்குட்டியின் அன்புக்கு அடிமையாகிவிட்டது. தற்போது இரண்டும் ஒன்றாக வளர்ந்து வருகின்றது. அக்குட்டிப் பூனைக்கு, நாய் பால் கொடுக்கும் காட்சிகளும்; பதிலுக்கு பூனை, நாயின் மீது படுத்துகொண்டு அதனுடன் கொஞ்சுவது, செல்ல சண்டை போடுவதும் என இரண்டும் தாயும் பிள்ளையும் போல அன்பை காட்டுகிறது.
இவற்றின் பாசமிகுதியை கண்ட ஜெயப்பிரகாஷ் ஆனந்தத்தில் வார்த்தையின்றி இருக்கிறார். இந்த அரிய நிகழ்வை காண அருகிலுருப்பவர்களும் ஆச்சரியத்துடன் ஜெயப்பிரகாஷ் இல்லத்துக்கு வந்து செல்கின்றனர்.
- நாகேந்திரன்