வீடியோ ஸ்டோரி

"3ம் அலையை தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வு தேவை": முதல்வர் வேண்டுகோள்

"3ம் அலையை தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வு தேவை": முதல்வர் வேண்டுகோள்

Veeramani

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் ஏதும் வழங்கப்படவில்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சில நகரங்களில் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதில் கூறியுள்ளார். எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து காணப்பட்டால் அந்தப் பகுதியை மூட மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பபடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக உடல் வெப்ப நிலை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், வரிசையில் காத்திருக்கும் பொது மக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.