டிரெண்டிங்

ஒரு பக்கத்துக்கு ₹9-19 சார்ஜ்; டோர் டெலிவரிக்கு ₹25.. Blinkitன் அறிவிப்பு எதற்கு தெரியுமா?

JananiGovindhan

உணவு டெலிவரி செய்யும் ஸொமேட்டோவின் மளிகை உள்ளிட்ட பொருட்களை ஸ்பீட் டெலிவரிச் செய்யும் ப்ளின்கிட் தளத்தின் மூலம் தற்போது மற்றொரு சேவையையும் செய்ய இருக்கிறது.

டெல்லி NCR மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக பிரின்ட் அவுட் டெலிவரி செய்யும் வசதியை ஸொமேட்டோவின் பிளின்கிட் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, jpeg, jpg, png, and pdf ஆகிய மாதிரிகளில் A4 அளவில் 10 MBக்குள் கோப்புகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்தால் போதும் 11 நிமிடங்களிலேயே வீட்டுக்கே பிரின்ட் அவுட் டெலிவரி செய்யப்படும்.

கருப்பு வெள்ளையாக இருந்தால் ஒரு பக்கம் பிரின்ட் அவுட் எடுக்க 9 ரூபாயும், கலர் பிரின்ட் அவுட் என்றால் 19 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இதுபோக இந்த சேவையை வழங்குவதற்காக டெலிவரி கட்டணமாக 25 ரூபாயும் வசூலிக்கப்படுமாம்.

இந்த சேவை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செய்யப்படும். இதற்கென எந்த எண்ணிக்கை வரம்பும் கிடையாது. ஆர்டர் பெறப்படும் ஃபைல்ஸ்கள் உடனடியாக சர்வரில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாக பாஸ்போர்ட், விசா, வாடகை ஒப்பந்தங்கள் போன்ற அவசர தேவை உள்ளவற்றுக்கு இந்த சேவையை விரிவுபடுத்துவதாகவும், அதைத் தொடர்ந்து மாணவர்களின் தேவைக்காகவும் இந்த சேவை வழங்கப்படும் எனவும் பிளின்கிட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக Money Control செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை கண்ட நெட்டிசன்கள் பலரும் பிளின்கிட்டின் இந்த சேவை கொள்ளையடிப்பது போல இருக்கிறது என்றும், வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நேரில் சென்று பிரின்ட் அவுட் எடுத்தால் அதிகபட்சம் 2 ரூபாய்தான் ஒரு பக்கத்துக்கு செலவாகும் எனவும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.