ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கிய நிலையில் 15 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், ஸ்ரீகாந்த் மற்றும் விமல் ஆகிய 3 இளைஞர்கள் உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளைஞர்கள் 3 பேரில் விமல், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேரும் கரையேறியுள்ளனர். ஆனால் விக்னேஷ் மட்டும் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதனையடுத்து இளைஞர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய விக்னேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் சுமார் 15 மணி நேர தேடுதலுக்கு பிறகு விக்னேஷ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 26 அடி ஆழம் கொண்டது குறிப்பிடத்தக்கது.