டிரெண்டிங்

கஞ்சா தொழில்போட்டி : இளைஞரை மது அருந்த அழைத்து கொலை செய்த கும்பல்

கஞ்சா தொழில்போட்டி : இளைஞரை மது அருந்த அழைத்து கொலை செய்த கும்பல்

webteam

செங்கல்பட்டில் கஞ்சா விற்பனை தொழில்போட்டி காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி செங்குட்டுவன். இவர் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி டோரா கார்த்திக் என்பவரும் மதுராந்தகம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. டோரா கார்த்திக் செங்குட்டவனின் நண்பனான சபரீசனுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக செங்குட்டுவனை கொலை செய்யப்போவதாக சபரீசனிடம் டோரா கார்த்திக் மிரட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செங்குட்டுவனிடம் சபரீசன் தெரிவிக்க, இருவரும் சேர்ந்து டோரா கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த 14ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சபரீசன் டோரா கார்த்திக்கை போனில் தொடர்பு கொண்டு மது அருந்துவதற்காக மதுராந்தகம் அடுத்த பழைய மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை பகுதிக்கு வரவழைத்துள்ளார். கார்த்திக் சம்பவ இடத்திற்கு செல்ல அங்கு பட்டா கத்திகளுடன் மறைந்திருந்த செங்குட்டுவன், சபரீசன் உட்பட ஆறு பேர் டோரா கார்த்திக்கை சரமாரியாக வெட்டி உள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கார்த்திக்கை அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த மினி லோடு வேனில் ஏற்றிக்கொண்டு முருகம்பாக்கம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்துள்ளனர். பின்னர் தலைமறைவாகியுள்ளனர்.

கொலை நடந்த பகுதியில் ரத்தம் படிந்த கத்தி மற்றும் செல்போன் ஒன்று கிடப்பதைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த மதுராந்தகம் போலீசார், தடயங்களை சேகரித்தனர். செல்போனை சோதனையிட்டதில் அது சபரீசனுடையது என்று போலீசார் அறிந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பெயரில் சபரீசனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செங்குட்டுவன் மற்றும் 4 நண்பர்களுடன் சேர்ந்து டோரா கார்த்திக்கை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

அவரை கைது செய்த போலீசார் இறந்தவரின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்தனர். இன்று ஏ.டி.எஸ்.பி. பொன்ராம் தலைமையில் டிஎஸ்பி மகேந்திரன், காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், மதுராந்தகம் வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் வனப்பகுதிக்கு சென்று புதைக்கப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். சபரீசன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான செங்குட்டுவன் மற்றும் சைமன், சைலாக், விக்னேஷ், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.