கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆடு திருட சென்ற இளைஞர் தப்பி ஓட முயன்றபோது கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஆடு திருடுவதற்காக, பூசப்பாடியை சேர்ந்த ரவி, அழகர் மற்றும் செந்தில் ஆகியோர் சென்றுள்ளனர். செந்தில் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெளியில் காத்திருக்க ரவியும், அழகரும் ஆடு திருட ஏரி வழியாக ஊருக்குள் நுழைந்தனர். அங்குள்ள கொட்டகையில் ஆடு திருட முயன்றபோது, சத்தம் கேட்டு ஆட்கள் வந்ததால் இருவரும் தப்பி ஓட முயற்சித்தனர்.
விவசாய நிலத்தின் வழியே ஓடியபோது, ரவி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரை பார்க்க அழகர் கிணற்றின் அருகே வர முற்பட்டபோது, ஊர் மக்கள் அவரை பிடித்து வைத்தனர். பிறகு சின்ன சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் சடலமாக இருந்த ரவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மூவரும் சேர்ந்து ஆடு திருட வந்தது தெரியவந்தது. ஏற்கனவே அழகர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் வெளிவந்தது. இதையடுத்து அழகர் மற்றும் செந்திலை போலீசார் கைது செய்தனர். ஆடு திருடுவதற்காக சென்று இளைஞர் உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.