உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தை ஏன் தேர்வு செய்தோம் என்பது குறித்து பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றது. மொத்தம் இருந்த 403 இடங்களில் 325ல் பாஜக வென்றது. இதனையடுத்து பாஜக சார்பில் யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள் என்ற பரப்பரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர்களின் பெயர்கள் பரிசிலிக்கப்பட்டு வந்ததது. எனினும் இறுதியில் அப்போது கோரக்பூர் கோயிலின் தலைமை மடாதிபதி மற்றும் மக்களவை உறுப்பினருமான யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இந்த விழாவில் யோகி ஆதித்யநாத் ஏன் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரை தேர்வு செய்தப் போது சிலர் என்னிடம் யோகி ஒரு உள்ளாட்சியை கூட நிர்வாகித்தது இல்லையே அவரை ஏன் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்கிறீர்கள் எனக் கேட்டனர்.
அது சரிதான் அவருக்கு ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லை. எனினும் நாங்கள் திறமையாக பணியாற்ற அர்ப்பணிப்புடைய நபரை தேர்வு செய்ய நினைத்தோம். ஆகவே தான் நாங்கள் யோகி ஆதித்யநாத்திற்கு முதல்வர் பதவியளித்தோம். நாங்கள் எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவு சரியாகும்படி யோகி ஆதித்யநாத் தற்போது சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.