அறிவு, ஞானம் வரும் போது பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல், “சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் கொள்ளளவு குறித்து தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்தேன். ஆனால் சரியான தகவல் இல்லை என்றே பதில் கிடைத்தது. வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் செய்து புதிதாக வீடுகள் கட்ட வேண்டுமென திட்டமிடுகிறார்கள். வீடுகளாக கட்டினால், உணவிற்கு எங்கு செல்வது. சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது” என்று கூறினார்.
மேலும், “ஒருவர் டெல்லியில் இருந்து என்னை தமிழ் பொறுக்கி என்றார்; நான் பொறுக்கிதான். அறிவு, ஞானம் வரும் போது பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். அரசியல்வாதிகள் கட்டளையிடுவதற்கு தான் தயாராக இருக்கிறார்கள். பணிகளை செய்வதற்கு தயாராக இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் தான் என்பதை மறந்துவிட்டார்கள். ஜனநாயகத்தில், மக்கள்தான் எஜமானர்களாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.