மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்த விஷால், அந்த மனுவில் பெறுநர் என்ற இடத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் என தவறாக குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து நடிகர் விஷால் மனு அளித்தார். அதில், மற்ற சுயேச்சை வேட்பாளர்களை முன்மொழிந்தவர்கள் நேரில் அழைக்கப்படவில்லை என்றும், தன்னை முன்மொழிந்தவர்களை மட்டும் தேர்தல் அதிகாரி நேரில் அழைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், தன்னை முன்மொழிந்த இருவரை ஆளுங்கட்சியினர் மிரட்டியதாகவும் விஷால் கூறினார். அதற்கு, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளதாக, விஷாலிடம் ராஜேஷ் லக்கானி தெரிவித்துவிட்டார்.
இதனிடையே விஷால் அந்த மனுவில் பெறுநர் என்ற இடத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் என தவறாக குறிப்பிட்டுள்ளார். பெறுநர் முகவரி, மாநில தேர்தல் ஆணையம், கோயம்பேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலுள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மனு அளித்துள்ள விஷால், மாநில தலைமை தேர்தல் அதிகாரி என குறிப்பிடாமல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் என குறிப்பிட்டுள்ளார்.
மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை செய்யும் அமைப்பு. அதன் அலுவலகம் கோயம்பேட்டிலுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை கவனிப்பவர். அவரது அலுவலகம் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது.