டிரெண்டிங்

உலக பிரியாணி தினம்... 10 பைசாவுக்கு பிரியாணி... திருச்சியில் கொண்டாட்டம்

kaleelrahman

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கிய தனியார் உணவகம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி உலக பிரியாணி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எப்பொழுதும் பிரியாணி என்றாலே அதை விரும்பி உண்ண பெரும்பாலான மக்கள் காத்திருப்பார்கள். இந்நிலையில் உலக பிரியாணி தினத்தை சிறப்பிக்கும் வகையில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில், இன்று 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. முதலில் வரும் நூறு நபர்களுக்கு மட்டும் பிரியாணி வழங்கப்படும் எனவும் கூறி இருந்தனர்.

 இந்நிலையில் திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள கடையில் பிரியாணியின் மேல் உள்ள நாட்டத்தால் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர். கொரோனா காலம் என்பதை மறந்தும் அதிக அளவிலான மக்கள் அங்கு கூடினர். இருந்த போதும் அந்த உணவகம் அறிவித்தப்படி பத்து பைசா நாணயத்துடன் முதலில் வந்த 100 நபர்களுக்கு மட்டும் பிரியாணி வழங்கியது. மீதமுள்ள நபர்கள் பிரியாணி வாங்க முடியாமல் ஏமாந்து திரும்பி சென்றனர்.

 இதேபோல் அந்த உணவகத்தின் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மற்றொரு கிளையில் கொரோனா முன் கள பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு இன்று ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டது.

வழக்கமாக 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மட்டன் பிரியாணி இன்று ஒரு ரூபாய்க்கும், பத்து பைசாவுக்கும் வழங்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.