தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவரும் நிலையில் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிகளை செய்து வருகிறது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் வாக்களிக்க 5 ஆயிரத்து 911 வாக்குச்சாவடி மையங்களை அமைக்க சென்னை மாவட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப 9 ஆயிரத்து 847 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. காவலர்கள் பாதுகாப்புடன் தனி அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பின்னர், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். முன்னதாக வாக்குச்சாவடி மையத்தை தயார்படுத்தும் வேலைகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடி மையத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தம், போதிய காவலர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 461 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு 2ஆம் கட்ட பயற்சியும் அளிக்கப்படுகிறது. முறைகேடுகளை களைய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் புகார் அளிக்க 1950 என்ற எண்ணையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.