அனைத்து கருத்துக் கணிப்புகளும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், "என்னைப் பொறுத்தவரை, முதலமைச்சர் என்றால் சாமானியர். எனவே எந்த உயர் பதவி கிடைத்தாலும் அதனை எனது தலைக்கு கொண்டுசெல்லமாட்டேன் "என்று தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து பேசிய பகவந்த் மான், "நான் முதலமைச்சரானால் அது என் தலையில் ஏறாது, ஏனென்றால் புகழ் எப்போதும் என் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். நான் இன்னும் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பேன். எனது பஞ்சாப் கனவுகளின் பஞ்சாப், மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள்
நாங்கள் மீண்டும் பஞ்சாபை பஞ்சாப் ஆக்குவோம். அதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது பிற கட்சிகளின் கனவுகள், அதனால்தான் அவர்கள் தோற்றுப் போகிறார்கள்" என தெரிவித்தார்
முதலமைச்சரான பிறகு எடுக்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், " காங்கிரஸ் பஞ்சாபில் எதையும் விட்டு வைக்கவில்லை. மணல் மாபியா, நில மாபியா, கேபிள் மாஃபியா, போக்குவரத்து மாஃபியா, கலால் மாபியா என பஞ்சாப் முழுக்கவும் மாஃபியாவால் நிரம்பியுள்ளது" என்று கூறினார்
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையாக உள்ளது.