டிரெண்டிங்

கேப், டாக்சியில் செல்பவர்களே இதையும் தெரிஞ்சுக்கோங்க.. டிக்டாக்கர் கூறிய Safety Trick!

JananiGovindhan

உலகம் முழுக்கவே பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எப்போது தனித்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. குறிப்பாக கேப் அல்லது டாக்சி போன்றவற்றில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது அந்த பாதுகாப்பு எந்த அளவுக்கு அத்தியாவசியமானது என்பது தொடர்ந்து நடக்கும் பாலியல் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்களே சாட்சியாக இருக்கின்றன.

குறிப்பாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் பெண்களிடம் பெப்பர் ஸ்பிரே, பாக்கெட் கத்தி போன்றவற்றை பயன்படுத்தச் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இவையெல்லாம் வைத்திருந்தும் சில கொடூரர்களால் பல பெண்கள் நித்தமும் பாதிக்கப்படுவது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தும், குற்றவாளிகள் குறித்தும் சமயங்களில் தரவுகள் ஏதும் கிடைக்காமல் போவதால் அந்த வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இந்த இக்கட்டான சூழலை தவிர்க்கவே டிக் டாக் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டுதலுக்குரிய ஐடியாவாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி Brennalina என்ற டிக் டாக் பயனர் ஒருவர் தன்னுடைய டிக் டாக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் கேப் அல்லது டாக்சியில் செல்லும் போது மேற்கொள்ளும் குயிக் ட்ரிக்கை பகிர்ந்திருக்கிறார். அதாவது கேபில் செல்லும் போது தன்னுடைய கை ரேகைகளையும், தலை முடிகளையும் அதில் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம் அந்த பெண்.

ஏனெனில், காரில் வரும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கை ரேகைகளும், தலை முடியும் முக்கியமான சாட்சியாக கருதப்படும். அவற்றைக் கொண்டு DNA பரிசோதனை செய்யப்படும் போது பாதிக்கப்பட்டது யார் என்பதை கண்டறிய போலீசாருக்கும் உதவியாக இருக்கும்.

இதுபற்றி பேசியிருக்கும் Brennalina, “எப்போதெல்லாம் கேப்-ல் பயணித்தாலும் என்னுடைய முடி மற்றும் கை ரேகையை விட்டு வருவதை தவறியதே இல்லை” என தெரிவித்திருக்கிறார்.