டிரெண்டிங்

கேக்கில் ரெஸ்யூமை அச்சடித்து ’நைக்’ நிறுவனத்துக்கு அனுப்பி அசத்திய அமெரிக்க பெண்!

JananiGovindhan

உலகின் பொருளாதாரம் இருக்கும் நிலையில் பலருக்கும் வேலை கிடைப்பதென்பதே குதிரைக் கொம்பாகத் தான் இருக்கிறது. அப்படியே ஒரு வேலை கிடைத்துவிட்டாலும் அதனை தக்கவைத்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது. அதேபோல நேர்காணலுக்கு செல்வோரும் தான் விண்ணப்பித்த வேலை கிடைக்க வேண்டுமென பலவாரு தங்களது திறமையை வெளிகாட்ட தயங்க மாட்டார்கள்.

அந்த வகையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நைக் நிறுவனத்திற்கு கேக் மூலம் தன்னுடைய ரெஸ்யூமை அனுப்பியிருக்கும் சம்பவம் குறித்து அப்பெண் தனது லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகியிருக்கிறது.

கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற பெண் நைக் நிறுவனத்திற்கு தான் விண்ணப்பித்திருந்த பதவிக்கான வேலை கிடைப்பதற்காக தன்னுடைய சுய விவரங்கள் அடங்கிய ரெஸ்யூமை கேக் ஒன்றில் அச்சிட்டு அனுப்பியிருக்கிறார். “சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய ரெஸ்யூமை கேக்கில் அச்சிட்டு நைக் நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தேன்.” எனத் தொடங்கி கார்லி தனது லிங்க்ட்இன் போஸ்ட்டில் விரிவாக எழுதியிருக்கிறார்.


அதில், “இப்போதைக்கு நைக் நிறுவனத்தின் குறிப்பிட்ட அந்த குழுவில் எந்த வேலைக்கும் ஆட்கள் எடுக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் நான் யார் என்பதை நைக் நிறுவனம் தெரிந்துகொள்ள சில வழிகளைக் கண்டுபிடிக்க விரும்பினேன். ஒரு பெரிய விருந்துக்கு கேக் அனுப்புவதை விட சிறந்த வழி என்ன இருக்கப் போகிறது” என்று கார்லி தனது பதிவில் விளக்கியுள்ளார்.

இதுபோக, நைக் நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நிறுவனத்தை இம்ப்ரெஸ் செய்வதற்காகவே இவ்வாறு செயததாக கூறியுள்ள கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன், தன்னுடைய நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவின் படி கேக்கின் மீது ரெஸ்யூம் இருப்பது போல வடிவமைத்து வழக்கமாக மெயில் அனுப்புவதை விட இப்படி வித்தியாசமான அனுகினேன். பின்னர் ஓரிகானின் பீவர்டனில் உள்ள நைக் நிறுவன தலைமையகத்திற்கு அந்த ரெஸ்யூம் கேக்கையும் அனுப்பி வைத்தேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். கார்லியின் இந்த பதிவுக் கண்ட நெட்டிசன்கள் பலரும் வியப்படைந்துப்போய் பதிவிட்டிருக்கிறார்கள். “இது ஒரு நல்ல முயற்சி” என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.