வேடசந்தூர் அருகே காதலனின் வீட்டு முன்பாக பொறியியல் பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன்(24). இவர் கரூர் தனியார் கல்லூரியில் தன்னுடன் படித்த ரேவதி என்னும் பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து நாககோனார் என்ற ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவதியை திருமணம் செய்வதாக விக்ரமன் உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால் விக்ரமன் திடீரென விக்ரமன் காணாமல் போனார். இந்நிலையில், ரேவதி விக்ரமனின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றபோது அவரை காணாததால் அவர் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் ரேவதியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரேவதி கூறும்போது, “3 வருடமாக நாங்கள் காதலிக்கிறோம். எங்கள் வீட்டிற்கு இந்த விஷயம் தெரிந்து பிரச்னை ஆனது. இதையடுத்து விக்ரமனின் மாமா, அக்கா ஆகியோர் என்னை அழைத்து வந்து நாகக்கோனார் என்னும் ஊரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்தனர்.
வாரம்தோறும் விக்ரமன் என்னை வந்து பார்த்துவிட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவே இல்லை. தொலைபேசி அழைப்பும் இல்லை. என்னை அழைத்து வந்த அவரின் அக்கா, மாமாவுக்கு போன் செய்தாலும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை” எனத் தெரிவித்தார்.