திருமணங்கள் தொடர்பான பல விநோதமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் பெண் ஒருவர் தன்னுடைய கணவனுக்கு திருநங்கையுடன் திருமணம் செய்து வைத்துள்ள நிகழ்வு ஒடிஷா மாநிலத்தில் நடந்திருக்கிறது.
ஒடிஷாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நர்லா பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்பதோலா என்ற பகுதியில் உள்ள தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போதிருந்தே அவருடன் நெருக்கமாக பழகி வந்த அந்த நபர் அந்த திருநங்கையை காதலிக்கவும் செய்திருக்கிறார்.
2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் அவரது இந்த நடவடிக்கைகளை அறிந்த மனைவி, இது குறித்து கேட்ட போது திருநங்கையுடன் தீவிரமான காதல் உறவில் இருந்ததை அந்த கணவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவரது காதலை ஒப்புக்கொண்ட அந்த மனைவி தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக் கொள்ளவும் தலையாட்டியிருக்கிறார்.
மனைவியின் ஒப்புதலை பெற்ற பிறகு, நர்லாவில் உள்ள கோவிலில் திருநங்கை மற்றும் தனது நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் மனைவியின் தலைமையில் காதலித்த திருநங்கையை அந்த நபர் கரம் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஒரிசா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநிவாஸ் மொஹண்டி என்பவர், “பெண்ணுடனோ திருநங்கையுடனோ இந்திய சட்டப்படி இந்து குடும்பங்களில் இரண்டாம் திருமணம் அனுமதிக்கப்படாத ஒன்று. இரண்டாவது திருமணம் நடந்தால், அது செல்லாது மற்றும் இந்திய சட்டத்தின்படி தண்டனைக்கு ஏற்றது.” எனக் கூறியிருக்கிறார்.
இதனிடையே இந்த திருமணத்தை முன்னின்று நடத்திய திருநங்கை அசோசியேஷனின் தலைவராக இருக்கும் காமினி பேசுகையில், “திருமணம் முடிந்த கையோடு நர்லா போலீசாரை நேரில் சந்தித்து இது குறித்து தெரிவித்தோம்.
அப்போது இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. எவரேனும் புகார் தெரிவித்திருந்தால் அப்போது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் எடுப்போம் என்றார்கள்” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மனைவியின் ஒப்புதலோடு திருமணம் செய்துக் கொண்ட அந்த நபர், சட்டத்தின் மீது எந்த கவலையும் இல்லை. என் மனைவியே சந்தோஷமாகத்தான் இருக்கிறார், நாங்கள் ஒரே குடும்பமாக சந்தோஷமாகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.