டிரெண்டிங்

நினைத்ததை சாதித்தாரா டிடிவி தினகரன்? - ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக அரசு !

webteam

அதிமுக ஆட்சியை கலைக்க டிடிவி தினகரன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையுமா என்று தேர்தல் முடிவுகளில் தெரியவர உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலாவிடம் சென்றது. ஆனால் அவர் சிறைக்கு செல்லும் முன் கட்சியை டிடிவி தினகரனிடமும் ஆட்சியை எடப்பாடியிடமும் ஒப்படைத்து விட்டு சென்றார். இதையடுத்து பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கவே ஆட்சியை தக்கவைத்து கொள்ள டிடிவியை வெளியேற்றியது எடப்பாடி அமைச்சரவை.

இதைத்தொடர்ந்து தாங்களே உண்மையான அதிமுக என்று டிடிவி தினகரன் போர்க்கொடி தூக்கினார். மேலும் அதிமுகவில் இருந்து பல தரப்பினரையும் தன் பக்கம் ஈர்த்தார். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதிமுகவின் பலதரப்பு எம்.எல்.ஏக்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்தனர். 

இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைத்தது எடப்பாடி அரசு. இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தரப்பு இந்த ஆட்சியை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று அமமுக என்ற கட்சியை உருவாக்கியது.

மேலும் 22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார் டிடிவி தினகரன். அப்போது, 22 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என அமமுக தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் சூலுரைத்தார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அமமுக முட்டுக்கட்டையாக இருக்கும் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக 14 இடங்களிலும் 8 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகிறது. அமமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெறாவிட்டாலும் பெருவாரியான வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, பரமக்குடியில் அதிமுகவை விட திமுக 1747 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. அங்கு அமமுக 1175 வாக்குகள் பெற்றுள்ளது. 

ஆண்டிப்பட்டியில் 674 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. அங்கு அமமுக 7003 வாக்குகள் பெற்றுள்ளது. பூந்தமல்லியில் 5718 வாக்குகளும் குடியாத்தத்தில் 6,200 வாக்குகளும் ஆம்பூரில் 6300 வாக்குகளும் அமமுக பெற்றுள்ளது. 

அதிமுக பல இடங்களில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் அமமுகவிற்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அதனால் பல்வேறு சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி அமமுகவால் தள்ளிப்போய் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் ஆட்சியை எடப்பாடி அரசு தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியை கலைக்க டிடிவி தினகரன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையுமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.