பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது தாராபுரம் தொகுதி. மூன்று முறை தேர்தல் களம் கண்டும் வெற்றி பெறாத முருகனுக்கு, இம்முறை தாராபுரம் கைகொடுக்குமா? - ஒரு பார்வை...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தாராபுரம் தொகுதியும் ஒன்று. தனித்தொகுதியான இங்கு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் பொன்னுசாமியை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் காளிமுத்து சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
1966 முதல் 12 சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்துள்ள தாராபுரம் தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். நாமக்கல் மாவட்டம் கோனூரைச் சேர்ந்த எல்.முருகன், தேர்தலில் இதுவரை 3 தோல்விகளை சந்தித்தவர். 2006-ஆம் ஆண்டில் சங்ககிரி தொகுதியிலும், 2011-ல் ராசிபுரம் தொகுதியிலும், அதே ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், எம்.எல்.ஏ. ஆவது உறுதி, எத்தனை வாக்குகள் வித்தியாசம்தான் என்பதுதான் கேள்வி என்கிறார் எல்.முருகன்.
(எல் .முருகனை எதிர்ப்பு போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ்)
வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இந்தத் தொகுதியில் இந்த முறை திமுகவே நேரடியாக போட்டியிடுகிறது. 1996-ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் மகளிர் அணியில் உள்ள கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் கலைமாமணி கலாராணியும், நாம் தமிழர் சார்பில் ரஞ்சிதாவும் போட்டியிடுகின்றனர்.
மூன்று முறை விருப்பமனுக்களை தந்தும், இந்த முறை கயல்விழிக்கு வேட்பாளராகும் வாய்ப்பளித்துள்ளது திமுக. அமமுக வேட்பாளர் கலைமாமணி கலாராணிக்கும் இதுவே முதல் தேர்தல். நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ரஞ்சிதா 25 வயதே ஆன இளம் வேட்பாளர். இவர் நூற்பாலை தொழிலாளியாகவும் இருப்பவர்.
எல்.முருகனுக்கு எதிராக 3 பிரதான கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று கருதப்படுகிறது. இந்த முறையாவது வெற்றி வசமாகும் என்ற நம்பிக்கையில் களமாடுகிறார் எல்.முருகன்.
தொகுதி மக்களின் மனதை வெல்வது யார்? - முதன்முறையாக பேரவைக்குள் செல்வாரா எல்.முருகன்? - வாக்காளர்கள் அழுத்தப்போகும் பொத்தான்களில் விடை கிடைக்கும்.