பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தாங்கள் அளித்துள்ள கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவிருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ள நிலையில் அவர் மும்பையிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் புதுச்சேரி விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். இரண்டு நாட்களில் எங்களை சந்திப்பதாக அவர் கூறியுள்ளார். நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் பார்ப்போம். சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லையெனில் குடியரசுத் தலைவரை சந்திக்க முயற்சி செய்வோம்" என்றார்.