டிரெண்டிங்

பாஜகவில் இணைகிறேன் - வி.பி.துரைசாமி

Rasus

இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தவர் வி.பி.துரைசாமி. இவர் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் முருகனைச் சந்தித்திருந்தார். இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரைசாமி நீக்கப்படுவதாக ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும், வி.பி.துரைசாமிக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த வி.பி.துரைசாமி தனது பதவி பறிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று தான் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “கருணாநிதி அழைத்தார் என்பதால் 2001-ஆம் ஆண்டு மீண்டும் திமுகவிற்கு வந்தேன். திமுகவில் சேர்ந்த என்னை 2006-ல் துணை சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி. இப்போது, திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். இன்று காலை பாஜகவில் இணைய உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.