வனப்பகுதியில் மான், முயல் மற்றும் காட்டுப்பன்றி வேட்டையை தடுக்க சிறப்பு தனிப்படைகளை சேலம் மாவட்ட வனத்துறை அமைத்துள்ளது. பண்டிகை காலங்களில் வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டை அதிகமாக நடப்பதால் டேனிஷ்பேட்டை வனத்தில் பாதுகாப்பு அதிகப் படுத்தியுள்ளனர். வனவிலங்குகளை வேட்டையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் அதிக பரப்பளவில் வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் மான், முயல், பன்றி ஆகிய விலங்குகள் அதிகளவில் உள்ளன. மேலும், பலவகையான பறவைகளும் உள்ளன. இந்த பகுதியில் பண்டிகை காலங்களில் வனவிலங்குகள் அதிகளவில் வேட்டையாடப்படுகிறது. மேலும், மான்களும், பன்றிகளும் குறிவைத்து வேட்டையாடப்டுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் மர்ம கும்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் முயல், புறா உள்ளிட்டவைகளை வேட்டையாடி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வனப்பகுதியில் விலங்;குகளையும் பறவைகளையும் வேட்டையாடும் கும்பலை பிடிக்க அனைத்து வனச்சரகத்திலும் தனிப்படைகள் அமைத்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி இந்த வாரம் முழுதும் வனத்தில் வேட்டை கும்பலின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால், டேனிஸ்பேட்டை, தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி, ஆத்தூர், வாழப்பாடி, கருமந்துறை, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் நூறு வன ஊழியர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் கூறும்போது விழா காலங்களில் அடுதடுத்த வரும் நாட்களில் மான், பன்றி, முயல், பறவைகள் வேட்டையாடுவதை கண்காணித்து பிடிக்க அனைத்து வனச் சரகதிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல வனத்தில் அத்துமீறி நுழைவதும் குற்றச்செயலாகும். மது பானங்களுடன் வனத்திற்குள் வரும் நபர்களை மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்தை முழுமையாக பாதுகாக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.