டிரெண்டிங்

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா களம் காண்பது ஏன்? கடந்தகால பின்னணி என்ன?

webteam

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது. அமமுகவுடன் அக்கட்சி பேசி வந்த நிலையில், சென்னை - கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் இளங்கோவனும், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளில் ஏற்கனவே அமமுக அறிவித்த 42 வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

2011 ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக வெற்றி பெற்ற 29 தொகுதிகளில் 12 இடங்கள் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 23 தனித் தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுகவுடனான கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலையும் அதிரடியாக வெளியிட்டது தேமுதிக. அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

2006 ஆம் ஆண்டு தேமுதிக தனித்து களமிறங்கிய முதல் தேர்தலில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். தேமுதிகவின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மைத்துனரும் துணை செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறு பேருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது தேமுதிக.

இந்நிலையில், தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2005ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய பிறகு, 2006இல் விஜயகாந்த் முதன்முதலில் விருத்தாசலம் தொகுதியில் தான் போட்டியிட்டார்.

தனித்து போட்டியிட்டு 40.49 சதவீத வாக்குகளுடன் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை வீழ்த்தினார். விருத்தாசலம் பாமகவின் கோட்டை என்று கூறப்பட்ட நிலையில் அதனை மாற்றினார் விஜயகாந்த். விருத்தாசலத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். 2011இல் அதிமுக கூட்டணியில் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், 2016 சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்தை போன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா முதல் முறையாக விருத்தாசலம் தொகுதியில் களம் காண்கிறார். அதனால் இந்த தேர்தலிலும் தேமுதிகவுக்கு விருத்தாசலம் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/L_gE26lZqd0" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>