டிரெண்டிங்

சரிந்ததா மோடி அலை...?! பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்?

Rasus

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைத்துமே தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் முக்கியம். கூட்டணியும் முக்கியம். அந்தவகையில் அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி அமைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாடினார். அப்போது, தமிழகத்தில் அதிமுக, ரஜினியுடன் கூட்டணியா..? அல்லது திமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்குமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடியோ, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும், பழைய நண்பர்களையும் வரவேற்க பாஜக தயாராக உள்ளது எனத் தெரிவித்தார். அத்துடன் வெற்றிகரமான கூட்டணி அரசியலை 20 ஆண்டுகளுக்கு முன்னரே சாத்தியப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்றும், அவரது பாதையில் பாஜக செயல்படுமென்றும் கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதாவோ, தேமுதிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அதிமுக தனித்து களம் கண்டது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிய ஜெயலலிதா பாஜகவை தாக்கியே பேசினார். அத்துடன் கடைசி நாள் பரப்புரையில் பேசிய அவர், “அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்” என்றார். அதிமுக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது வெளிப்படையாகவே இருந்தது.

தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் அதிமுகவிற்கும் மத்தியில் பாஜகவிற்கும் வெற்றியை அள்ளித் தந்தது. மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது மோடி அலைதான். குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அம்மாநிலம் அடைந்த வளர்ச்சி தேசிய அளவில் அவர் ஜொலிக்க காரணமாக அமைந்தது. அதனால் மோடி அலை ஓரளவிற்கு எடுபடுவே பிரதமராக அரியணையில் அமர்ந்தார்.

இந்தச் சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களுக்கு பிரதமர் மோடி மீது இருந்த ஈர்ப்பே அவர் பிரதமர் ஆவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. பெரிய அளவில் மற்ற கூட்டணி தலைவர்களை பிரபலப்படுத்தாமலும், தன் கட்சியில் செல்வாக்கு உள்ள தலைவர்களையும் மையப்படுத்தாமலும் பிரதமர் மோடி என்ற ஒற்றை மந்திரத்தில் பாஜக வெற்றி கண்டது. பாஜக தொண்டர்களும்கூட அப்படியே கருதினர்.

ஆனால் தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியால் சிறு, குறு வணிகம் பாதிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று முடிந்த 5 மாநிலத் தேர்தலில் எதிரொலித்தது. பாஜக 5 மாநிலத் தேர்தலிலும் தோல்வியே கண்டது. இது மோடி அலை சரிவை சந்தித்துள்ளதை காட்டுகிறது. இந்நிலையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கதவு தயாராகவே இருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் அதிமுக ஏற்கெனவே கூட்டணி வைத்திருக்கிறது. 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பாஜகவுக்கு பெரும்பான்மையில்லை. இதனையடுத்து பாஜக, அதிமுகவை நம்பியே ஆட்சி அமைத்து. வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவர் பிரதமராக பதவியேற்ற சில நாட்களிலேயே, தான் சொல்பவரைத் தான் அமைச்சராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு ஜெயலலிதா அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். ஆனால் அதற்கெல்லாம் வாஜ்பாய் ஒத்துக்கொள்ளாமல் உறுதியாக மறுத்துவிட்டார்.

இதனையடுத்து பாஜகவிற்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றார் ஜெயலலிதா. நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக, திமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்த முறை திமுக உதவியுடன் பாஜக வெற்றி பெற்றது. மீண்டும் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். ஆக, திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் 2 பிரதான கட்சிகளுடனும் பாஜக ஏற்கெனவே கூட்டணி வைத்திருக்கிறது.

தற்போதும் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக பாஜகவுடன் இணக்கமான நிலையைக் கடைபிடிப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது. இந்நிலையில் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி கண்ட அதிமுக, நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப் போகிறதா என்ற கருத்து நிலவுகிறது. பழைய நண்பர்கள் என்ற அதிமுகவை மையப்படுத்தி பிரதமர் மோடி பேசினாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

நரேந்திர மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு அவர் அளித்த விளக்கத்தில், “எதிர்க் கூட்டணியில் அல்லாத அத்தனை பேரும் எங்கள் கூட்டணியில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிப்பவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள் மீண்டும் பாஜக கூட்டணியில் வர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஏற்கெனவே இல்லாதவர்கள் கூட பாஜக கூட்டணியில் வர வாய்ப்பு இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் மோடியை யார் பிரதமராக்க உழைக்கிறார்களோ அல்லது நினைக்கிறார்களோ அவர்கள் பாஜக கூட்டணியில் வர வாய்ப்பு இருக்கிறது. ஆக எல்லா வாய்ப்பும் இருக்கிறது.” என்றார்.

இதுகுறித்து பாஜகவை சேர்ந்த கே.டி. ராகவன் பேசும்போது, “பாஜக எப்போதுமே கூட்டணிக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. மெஜாரிட்டியில் வெற்றி பெற்றாலும் கூட கூட்டணி கட்சிகளுக்கான மரியாதையை பாஜக எப்போதுமே கொடுத்திருக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட அதனையே கடைபிடித்தார். தமிழகத்தில் கூட்டணியோடு தான் தேர்தலை சந்திக்க போகிறோம் என தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்கெனவே சென்னைக்கு வரும்போது தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும் தற்போது தமிழகத்தில் கூட்டணிக்கு கதவுகள் திறந்தே இருக்கிறது என கூறியுள்ளார். நரேந்திர மோடி அவர்களை பிரதமராக யார் ஏற்பார்களோ அவர்களுடன் கூட்டணி இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.