டிரெண்டிங்

மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏன் இடைத்தேர்தல் இல்லை ? என்னென்ன வழக்குகள் ?

மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏன் இடைத்தேர்தல் இல்லை ? என்னென்ன வழக்குகள் ?

Rasus

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்குள்ள வழக்குகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது. ஆனால், சுயநினைவோடு இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சிலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லை.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், அரசு ஒப்பந்ததாரர் என்பதை மறைத்தாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் சுந்தர்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்துவதற்கான முகாந்திரம் இல்லை என கருதி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதிமுக சார்பில் வெற்றிபெற்ற சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில்பாலாஜியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரவக்குறிச்சி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.