டிரெண்டிங்

எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் ?

எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் ?

webteam

தமிழகத்தில் சொகுசு விடுதி அரசியல் ஜெயலலிதாவின் காலத்திலேயே ஆரம்பித்ததுதான். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அது விஸ்வரூபம் எடுத்தது. முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் பிரிவினையில் ஈடுபட்டு, ஆள் சேர்க்க முயல, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள். ஓ.பி.எஸ்.க்கு பதிலாக எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல இருந்ததால், எடப்பாடி பழனிசாமியை புதிய முதல்வராக்கினார்.

முதலமைச்சராக இருந்த பழனிசாமி, ஓ.பி.எஸ். உடன் கைகோர்க்க மீண்டும் தொடங்கியது சொகுசு விடுதி அரசியல். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி விடுதிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் கூண்டோடு பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு எப்போது என நீதிமன்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது ரெசார்ட் பாலிடிக்ஸ்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பால் தொடங்கியிருக்கிறது இந்த ஏற்பாடுகள். தினகரன் தரப்பில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் , எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தாவலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால், இந்த முடிவை தினகரன் எடுத்துள்ளதாகவும், தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குற்றாலம் ரெசார்ட் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புஷ்கரம் விழா செல்ல இருப்பதாக தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறார்

சொகுசு விடுதிக்கு செல்வதும், செல்லாததும் அவர்களது விருப்பம் என்றாலும் கூட, ஏன் இந்தத் திடீர் முடிவு, இதனால் யாருக்கு இலாபம், யாருக்கு பாதகம் என்ற எண்ணிக்கை கணக்கும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் தற்போதைய நிலையில் பெரும்பான்மையை விட குறைந்த இடங்களையே கொண்டு, எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். 

தற்போதைய நிலையில் அதிமுகவில் உறுதியான எண்ணிக்கையில் 112 பேர் இருக்கிறார்கள் (தனியரசு, அன்சாரி உட்பட). திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 97 பேர் உள்ளனர். தினகரன் தரப்பில் 23 பேர்  (தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 +தினகரன் மேலும் கலைச்செல்வன், ரத்தின சபாபதி, எஸ்.ஆர்.பிரபு, கருணாஸை சேர்த்து) உள்ளனர்.  இவர்களோடு சபாநாயகர். திருவாரூர், திரும்பரங்குன்றம் காலியாக உள்ளன. இந்நிலையில் இருவிதங்களில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. 

தகுதி நீக்கம் செல்லும் அல்லது தகுதி நீக்கம் செல்லாது. 
 
தகுதி நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு உடனடியாக பாதிப்பு இருக்காது. ஏனெனில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் வெற்றி பெறும் எண்ணிக்கை அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை வீழ்த்த முயற்சிக்கலாம். ஆனால் குறைந்த காலத்தில் நடக்காத ஒன்று.

தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு உடனடி நெருக்கடி ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கும் திமுகவுடன் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். திமுக, கூட்டணி கட்சிகள் அவை நடவடிக்கையை புறக்கணித்தால் கூட, ஆட்சி கலையாது. எனவே அதற்கும் அமமுக சற்று மெனெக்கெட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்து, தடையாணை பெற்றால் ஆட்சிக் கலைப்பை சற்று தவிர்க்கலாம். ஆனால் உரிய காரணங்கள் இல்லாமல் அதனை உச்சநீதிமன்றம் ஏற்காது.