ஜெயலலிதா குறித்த வீடியோவை ஒரு வருடம் மறைத்து வைப்பதற்கான அவசியம் என்ன என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திருநாவுக்கரசர் புதிய தலைமுறையிடம் பேசுகையில், “ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை அதுகுறித்த புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிட விரும்பவில்லை என சொல்லலாம். ஏனென்றால் ஜெயலலிதாவோ, எம்.ஜி.ஆரோ, கலைஞரோ இவர்களுக்கு என மக்கள் மத்தியில் ஒரு தனி இமேஜ் உள்ளது. அது சிதைக்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மரணம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்து சர்ச்சைகள் எழுந்தன. அவர் மருத்துவமனையில் எப்படி அனுமதிக்கப்பட்டார். உயிருடன்தான் அனுமதிக்கப்பட்டாரா? அவரை அடித்து மருத்துவமனையில் சேர்ந்தனரா? என பல்வேறு வதந்திகள் உலா வந்தன. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் சிபிஐ விசாரணை, நீதி விசாரணை எல்லாம் கோரினர். தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ பதிவை ஒரு வருடம் மறைத்து வைப்பதற்கான அவசியம் என்ன?” என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசியவர், மக்களுக்கு இருந்த சந்தேகங்களை போக்க இந்த வீடியோவை முன்னரே வெளியிட்டிருக்க வேண்டும். தற்போது கூட ஒரு ஷாட்டை மட்டும்தான் வெளியிட்டுள்ளனர். மீதமுள்ள காட்சிகளை எப்போது வெளியிடுவார்கள். என்ன ஆதாரங்கள் உள்ளதோ அவை அனைத்தையும் வெளியிட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது தானே என அவர் கூறினார்.
அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க தற்போது இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம். நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் லாபத்திற்காகவும் கூட இருக்கலாம். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என சந்தேகம் உள்ளது. அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டதா? போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா? வேறு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்றபோது எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.