டிரெண்டிங்

பொதுத் தொகுதிகளை விட தனி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாவது ஏன்?

JustinDurai

தமிழகத்தில் தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் பொது தொகுதிகளை விட தனி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவிகிதம் என்பது கணிசமாக உயர்ந்து வருகிறது. வாக்களிக்கும் கடமையை மக்கள் தவற விட கூடாது என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை இதற்கு காரணமாக கூறலாம். குறிப்பாக பொது தொகுதிகளை காட்டிலும் 44 தனி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருப்பது தமிழகத்தின் மற்றொரு சிறப்பு. 1991 சட்டமன்ற தேர்தலில் இருந்து வாக்குப்பதிவு சதவிகிதங்களை ஆய்வு செய்தால் இந்த விவரம் தெரிய வருகிறது.

1991ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பொது தொகுதிகளில் பதிவான வாக்கு விகிதம் 63.84 விழுக்காடு, அதுவே தனி தொகுதிகளில் 64.81 விழுக்காடு. 1996ஆம் ஆண்டு தேர்தலில் பொது தொகுதிகளில் 66.95 சதவிகிதமும், தனி தொகுதிகளில் 68.28 சதவிகிதமும் வாக்கு பதிவாகியுள்ளது. 2001ஆம் ஆண்டில் பொது தொகுதிகளில் 59.07 சதவிகித வாக்குகளே பதிவான நிலையில் தனி தொகுதிகளில் 61.20 சதவிகித வாக்குகள் பதிவானது. 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பொது தொகுதிகளில் 70.56 விழுக்காடும், தனி தொகுதிகளில் 70.88 விழுக்காடும் வாக்குகள் பதிவாகின.

2011ஆம் ஆண்டில் மட்டும் பொது தொகுதிகளில் அதிகமாக அதாவது 78.01 சதவிகித வாக்குகளும், தனி தொகுதிகளீல் 77.77 சதவிகித வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே 2016இல் பொது தொகுதிகளில் 74.08 சதவிகிதம், தனி தொகுதிகளில் 77.77 சதவிகிதம் என்ற அளவில் வாக்குகள் பதிவாகின. தனி தொகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்கிறார் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார்.

பொதுவாகவே நகர்புறங்களை விட கிராமங்களில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு நாளை விடுமுறை நாளாக கருதி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவது, வெயிலில் வந்து வாக்களிக்க வேண்டுமா என வாக்காளர்கள் நினைப்பது இதற்கு காரணம் என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா. அது தவிர தனி தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர் பொதுவாகவே அங்குள்ள வாக்காளர்களுக்கு நன்கு பரிச்சயமானவராகவும் நேரடி தொடர்பில் இருப்பவராகவும் இருப்பதால் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார். வாக்காளர்கள் குறிப்பாக தனி தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் அதிகமாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அம்சமே.