டிரெண்டிங்

கபடிக்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?: உயர்நீதிமன்றம் கேள்வி

கபடிக்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?: உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

கபடி போட்டிக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்றும், இது போன்ற போட்டிகளுக்கு தடை விதிப்பதன் மூலம் அந்த விளையாட்டு அழியும் சூழல் ஏற்படும் என்றும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கபடிப் போட்டிகள் நடத்துவதற்கு காவல்துறை விதிக்கும் தடைகளைப் பார்த்து உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த நவம்பர் 2013 ஆம் ஆண்டிலேயே உள்ளூர் கபடி விளையாட்டுக் குழுக்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் கபடிப் போட்டிகள் தடைப்பட்டு வருகின்றது.

கபடிப் போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ராஜா மற்றும் பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கபடிப் போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று தெளிவான உத்தரவு இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் போட்டிகள் நடத்த காவல்துறை அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்று செய்வதால் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அழிவதோடு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளின் பக்கம் மக்கள் கவனம் திரும்பிவிடும். குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் மட்டும் போட்டிகள் அதிகரித்துவிடும். கபடிக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டிருக்கிறோம். அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.