Gold ANI
டிரெண்டிங்

இனி தங்கம் மட்டுமல்ல.. வெள்ளியையும் தொட முடியாது.. அதிகரிக்கப் போகும் விலை!

தங்கத்தின் விலை அடுத்த மாதம் மிகப்பெரிய உச்சத்தை எட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

தங்கம் என்பது உலக அளவில் மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. புவிசார் பதற்றங்கள் ஏற்பட்டாலோ, தொழில்துறை அதிக நஷ்டங்களை சந்தித்தாலோ முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை வாங்கிக் குவிப்பதால், அதன் விலை அதிகரிக்கும் என்று பொதுவான காரணங்கள் கூறுவதுண்டு.

Gold

கடந்த சில மாதங்களாக, ஈரான் - அமெரிக்க போர், ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வருவதால், தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படியான சூழலில், இந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் 15 சதவீதம் வரையிலும், வெள்ளி 19 சதவீதம் வரையிலும் உயர்ந்திருக்கிறது.

அடுத்த மாதம், தங்கத்தைப் பொறுத்தவரை 10 சதவீதம் வரையிலும், வெள்ளியைப் பொறுத்தவரை 12 சதவீதம் வரையிலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, தங்கம் ஒரு சவரன் 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும், வெள்ளி ஒரு கிலோ 3 லட்சம் வரையிலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பதற்கு தனித்தனி காரணங்கள் உள்ளன.

gold

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக சேர்த்து வருவதும், மத்திய கிழக்கில் நடைபெறும் போரும், அமெரிக்க டாலர் பலவீனம் அடைந்ததும், தங்கத்தின விலை மிக வேகமாக உயர்வதற்கு காரணமாக உள்ளது. ஏ.ஐ. டேட்டா சென்டர்கள், மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் அதிக அளவு வெள்ளியை பயன்படுத்துவதால், அந்த உலோகத்திற்கான தொழில்துறை தேவைகள் தங்கத்தைவிட அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கேற்ப சுரங்கங்களில் உற்பத்தி கிடைக்காததால் வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், எதிர்காலங்களில் தங்கத்தைவிட வெள்ளியின் விலை சதவீதத்தின் அடிப்படையில் மிக அதிகமாக உயரும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் தங்கம், வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் சந்தை மதிப்பு, 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 5 சதவீதம் வரை இன்னும் கூடுதலாக உயரும் என்றும் கூறப்படுகிறது.