டிரெண்டிங்

கூவத்தூர் விடுதியை மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

webteam

பெங்களூருவில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் விடுதியில் சோதனை நடத்திய வருமானவரித்துறை, கூவத்தூர் விடுதியை மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன் என திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கூவத்தூர் விடுதியில் எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டது குறித்தும், அங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பாக செய்திகள் வெளியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கூவத்தூர் விடுதி விவகாரம் முதல் ஆறுக்குட்டி தற்போது அணி மாறியது வரை வருமானவரித்துறையினருக்கு சந்தேகம் வராமல் போனது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிபிஐ, வருமான வரித்துறை போன்ற சுதந்தர மிக்க அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் விடப்படும் எச்சரிக்கை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இது போன்ற அமைப்புகளை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கினை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.