சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி மற்றும் பாஜக தரப்பில் சொந்தம் கொண்டாடப்படுகிறது.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையாளர் ராஜிவ் குமாரை, சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருந்தது. இதில் சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசுத் தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டனர்.
சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்:
சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தங்கள் அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் கைது செய்தது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சாரதா முறைகேடு வழக்கில் கொல்கத்தா போலீசார் தங்களுக்கு அளித்த தொலைபேசி அழைப்பு விவர ஆவணங்களில் முறைகேடான நோக்கில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்ததாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் மிக முக்கிய ஆதாரங்களாக திகழும் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை முக்கிய குற்றவாளிகளிடமே மேற்கு வங்க காவல் புலனாய்வுக்குழு திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐயின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க உள்ளூர் பிரமுகர்கள் மிகப்பெரிய சதி செய்திருப்பது அம்பலமாவதாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது.
அபிஷேக் சிங்வி வாதம்:
இதைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசு சார்பில் அபிஷேக் சிங்வி வாதாடினார். ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா ஆணையர் ராஜிவ் குமார் மீது இது வரை ஒரு வழக்கு கூட தொடரப்படவில்லை என்றும் சிபிஐ விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் அவர் ஆஜரானார் என்றும் சிங்வி தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
இதன் பின் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆணையர் ராஜிவ் குமார் சிபிஐ விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதே சமயம் விசாரணை நடைபெறும் சமயத்தில் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது என்றும் மேற்கொண்டு விசாரணை செய்யும் போது அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் சிபிஐக்கு நீதிபதிகள் அறிவறுத்தினர்.
மேலும் வழக்கு விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி மற்றும் பாஜக தரப்பில் சொந்தம் கொண்டாடப்படுகிறது.
தார்மீக வெற்றி - மம்தா
மம்தா கூறுகையில், “இது தார்மீக ரீதியான வெற்றி. நீதிமன்றம் உள்ளிட்ட மற்ற எல்லா நிறுவனங்கள் மீதும் நாங்கள் அதிகப்படியான மரியாதை வைத்துள்ளோம். நாங்கள் நீதிமன்றத்திற்கு கடமைப்பட்டுளோம். சிபிஐக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று ராஜீவ்குமார் ஒருபோதும் சொல்லவில்லை. இருதரப்பினருக்கும் பொதுவான இடத்தில் சந்திக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் வாருங்கள் வந்து சந்தித்து பேசலாம். விசாரணையில் பங்கேற்கமாட்டேன் என்று ஒருபோதும் ராஜிவ் தெரிவிக்கவில்லை. சிபிஐ அவரை கைது செய்ய விரும்பியது” என்று கூறினார்.
ஊழலுக்கு எதிரான வெற்றி - பாஜக
ஆனால், விசாரணைக்கு காவல் ஆணையர் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் உறுதியான வெற்றி. சிபிஐக்கு இது தார்மீக ரீதியான வெற்றி. சிபிஐக்கு முன்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர் ஆக வேண்டும். அதேபோல், சிபிஐ தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.
அதேபோல், “பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேச ஏன் சிறிய மைதானம் ஒதுக்கப்பட்டது? பாஜக தலைவர் மற்றும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி கலந்து கொள்ளும் பேரணிகள் ஏன் ரத்தானது” என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.