பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறுகின்றன. இவற்றில் பஞ்சாப், உத்தரப்பிரதேச தேர்தல் கள நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
யார் வசமாகும் உத்தரப்பிரதேசம்?
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி-10 ஆம்தேதி தொடங்கி, மார்ச் 7 ஆம்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 202 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும். 23 கோடியே 78 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலத்தில், 15 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.
தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா, அப்னா தள், நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டது. சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது. பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து களம் கண்டுள்ளன. மக்களவைக்கு 80 எம்.பிக்களையும், மாநிலங்களவைக்கு 30 எம்.பிக்களையும் அனுப்பும் மாநிலம் உத்தரப்பிரதேசம். இதனால் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத்தேர்தல் 2024 நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
பஞ்சாபில் மகுடம் சூடுவது யார்?
117 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது. ஆம் ஆத்மி கட்சியும் தனித்து களம் கண்டது. பஞ்சாபில் ஏற்கனவே ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சிரான்மணி அகாலி தள், சன்யுக்த் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
அதேபோல சன் யுக்த் சமாஜ் மோர்ச்சா, சன் யுக்த் சங்கர்ஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துபோட்டியிட்டன. தவிர லோக் இன்ஷாப் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. 117 தொகுதிகளில் 59 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும்.