டிரெண்டிங்

இரட்டை இலை யாருக்கு?: அக்.6 ஆம் தேதி இறுதி விசாரணை

இரட்டை இலை யாருக்கு?: அக்.6 ஆம் தேதி இறுதி விசாரணை

webteam

இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயர் யாருக்கு என்பதற்கான இறுதி விசாரணை வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆவணங்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் முதலமைச்சர் தரப்பும், தினகரன் தரப்பும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

முடக்கப்பட்டுள்ள அதிமுக கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் அணிகள் தங்கள் பிரமாணப் பத்திரங்களையோ, ஆட்சேபனைகளையோ தெரிவிக்க இன்றே கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி சார்பில் ஒரு டெம்போ வேன் நிறைய ஆவணங்கள் மற்றும் ஆறு டிராவலர் பெட்டிகள் முழுவதும் என கட்டுகட்டாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 2,140 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அணிகள் இணைந்துவிட்ட நிலையில் தங்கள் தரப்பில் 113 எம்எல்ஏக்கள், 43 எம்பிக்கள் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தினகரன் தரப்பில் ராஜா செந்தூர்பா‌ண்டி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தார். ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

இதற்கிடையே ஜெ.தீபா சார்பில், தேர்தல் ஆணையத்தில் 1250 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.