இன்று நடைபெறும் முதல் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 45வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக நடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றதால் அதே உற்சாகத்துடன் களமிறங்க உள்ளன. டெல்லி அணியைப் பொறுத்தவரையில் பிரித்வி ஷாவும், டேவிட் வார்னரும் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அதிரடி தொடக்கத்தை அளித்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். மிட்ஷெல் மார்ஷ் மற்றும் தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரின் அதிரடி டெல்லி அணிக்கு மிகவும் முக்கியம்.
ஆல் ரவுண்டர்களான லலித்யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்த வேண்டியது அவசியம். டெல்லி அணிக்கு தற்போது பலமாக மாறியிருப்பது ரோவ்மென் பாவெல். தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் கடந்த சில போட்டிகளில் பாவெல் பார்முக்கு திரும்பியிருப்பது டெல்லிக்கு பலம். அவர் அதிரடி காட்டினால் டெல்லிக்கு ரன் எகிறும் என்பதில் சந்தேகம் இல்லை. சுழலில் குல்தீப்யாதவ் அபாரமான ஃபார்மில் உள்ளார். ஆடுகளமும் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றும் பவுலிங்கில் அவர் பிரகாசிக்க வாய்ப்பு அதிகம்.
லக்னோ அணியும் டெல்லி அணிக்கு சமமான பலமான அணியாக உள்ளது. அந்த அணியின் பலமாக கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளார். அவர் தொடக்க வீரராக தொடர்ந்து அசத்தி வருகிறார். அவருடன் டி காக்கும் பேட்டிங்கில் அசத்தினால் லக்னோ அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கும். 3வது வீரராக இறங்கும் தீபக் ஹூடா நிலைத்து நின்று ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். ஆல்ரவுண்டர்கள் க்ருனால்பாண்ட்யா, ஜேசன் ஹோல்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்த வேண்டியது முக்கியம்.
பந்துவீச்சில் ஆவேஷ்கானும், சுழலில் ரவி பிஷ்னோயும் கலக்குவார்கள் என்று நம்பலாம். 9 போட்டிகளில் ஆடி 6 வெற்றி 3 தோல்வியுடன் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு பிரகாசம் ஆகும் என்பதால் இரு அணிகளும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம். டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
டெல்லி கேப்பிடல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), KL ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய்