தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் யார் யாருக்கு விலக்கு அளிப்பது என மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு செய்து பணி விலக்கு அளிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் மத்திய,மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் 30,000 மேற்பட்ட பணியாளர்கள் தேவை உள்ளது.
தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க தகுதியுள்ள நபர்கள்:
பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 6 மாத காலம் உள்ளவராக இருக்க வேண்டும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்கு குறைவான குழந்தையுடைய பாலூட்டும் தாய்மார்கள்,மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் டயாலிசிஸ் போன்ற கடுமையான மருத்துவ நோய்கள் உள்ளவர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்களிப்படலாம் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கடமை விலக்கு கோரிக்கைகளை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிப்பதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர்,உறுப்பினர் செயலாளராக மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார் உறுப்பினர்களாக கொண்ட 4 பேர் குழு அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
துணை ஆட்சியர் அல்லது தாசில்தார் கேடரில் உள்ள கமிட்டி உறுப்பினர்களுக்கு இதன் மூலம் வாக்குச்சாவடி பணியாளர் தேர்தல் கடமை விலக்கு கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் உறுப்பினர் - செயலாளருக்கு தகுந்த மாற்றீடு கிடைத்த பிறகு, எந்தவொரு வாக்குச்சாவடி பணியாளர்களின் விலக்கு கோரிக்கையையும் ஏற்க இதன் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறையிலிருந்து துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார் கேடரில் உள்ள குழுவின் குறிப்பிட்ட உறுப்பினர்களை மாவட்ட ஆட்சியர் நியமிக்கலாம் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.