டிரெண்டிங்

'தோனியை போல் இவர் கூலானவர்' - யாரை புகழ்ந்தார் ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ்?

JustinDurai

'தினேஷ் கார்த்திக் மிகவும் திறமையானவர். தோனியை போல மிகவும் கூலாக அணுகக்கூடியவர்' எனப் புகழ்ந்துள்ளார் ஆர்சிபி  அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற  நிலையில் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் தினேஷ் கார்த்திக். பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டி குறித்துப் பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், "நீங்கள் பெரிய இலக்கு போட்டிகளை விடவும், இது போல சிறிய இலக்கு போட்டிகளை வெல்வது முக்கியம். இது உங்களுக்கு நேர்மறையான மனநிலையை கொடுக்கும். கடந்த போட்டி இங்கு விளையாடும் போது பந்து நன்றாக ஸ்விங் ஆனது. ஆனால் இன்று பிட்சில் நல்ல பவுன்ஸ் இருந்தது. அவர்களை நாங்கள் வீழ்த்த வேண்டும் என்றால் விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பதே முக்கியம். விக்கெட்டுகளை இழந்தால் அவர்கள் எங்களை எளிதாக வீழ்த்த முடியும் என்பது நன்றாகவே தெரியும்.

தினேஷ் கார்த்திக் மிகவும் திறமையானவர். அனுபவமிக்கவர். ஆட்டத்தை நன்றாக புரிந்துகொண்டு கடைசி ஐந்து ஓவர்களில் ஆட்டத்தை மாற்றக்கூடியவர். அவர் இதை தோனியை போல மிகவும் கூலாக அணுகக்கூடியவர். அதேபோல எங்கள் அணியில் தினேஷ் கார்த்திக், விராட் கோலி என அனுபவமிக்க வீரர்கள் உள்ளார்கள். எங்களுக்குள் நல்ல கருத்து பரிமாற்றம் இருக்கும். இருவரும் எனக்கு பல யோசனைகளை கொடுப்பார்கள். அதில் எனக்கு சரியாக எது தோன்றுகிறதோ அதை செயல்படுத்துவேன். அவர்கள் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்தான்’’ எனக் கூறினார்.