தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன என்று சென்னை தி.நகரில் நடைபெற்ற நற்பணி மன்ற செயலி அறிமுக விழாவில் பேசிய கமல் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பெயர் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த கமல், “கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியமுமில்லை; அவசரமும் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியிருக்கிறேன். கட்சி தொடங்கும் முன் அஸ்திவாரம் பலமாக இருக்கவே காத்திருக்கிறேன். சினிமா எடுக்கவே 6 மாதங்கள் முன் ஏற்பாடு செய்பவன் நான். இது அதனை விட பெரிய பணி” என்று தெரிவித்தார்.
மேலும் கமல் பேசுகையில், “தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன. பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். உண்மைகள் மட்டுமே அனைவராலும் எப்போதும் பேச முடியாததாக உள்ளது. தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பதும் தவறுதான். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் உதவியுடன் அது நடக்கும். பிரச்சனைகளுக்கு எதிரான நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டும். நாம் எல்லோரும் முயன்றால் நல்லதை சரியாக செய்ய முடியும்” என்று கூறினார்.