கர்நாடகத் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக வந்த கருத்து கணிப்புகள் காங்கிரஸ், பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்து கிங் மேக்கராக இருக்கும் என்றுதான் பெரும்பாலானோர் கணித்தனர். அப்படி தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் காங்கிரஸ் அல்லது பாஜக, மஜத உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதில், பாஜக உடன் மஜத கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான உடனே, 78 இடங்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ் உடனடியாக மஜதவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தது எல்லோருக்கும் ஷாக். பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 116 இடங்கள் இருந்தது. அதனால், குமாரசாமி முதலமைச்சர் ஆகிவிடுவார், ஒரு மாதமாக கர்நாடக அரசியலில் நீடித்து வந்த பரபரப்பு முடிந்துவிடும் என்று தெரிந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானது முதல்தான் கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எடியூரப்பா, குமாரசாமி இருவரும் ஆட்சி அமைக்க உரிமைக் கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். ஆளுநர் வஜுபாய் வாலா மே 16ம் தேதி இரவு 9 மணியளவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். யாரும் எதிர்பாராத விதமாக 15 நாட்கள் எடியூரப்பாவிற்கு அவகாசம் கொடுத்தார். இந்த இடத்தில் இருந்துதான் காங்கிரஸ் கட்சி தனது வேலையை மும்முரப்படுத்தியது.
ஆளுநர் அழைப்பு விடுத்த சில நிமிடங்களிலே, அதற்கு எதிராக காங். உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்திய வரலாற்றில் இரண்டாவது முறையாக யாகூப் மேனன் வழக்கிற்கு பின் காங்கிரஸ் கட்சியின் மனு மீது நள்ளிரவில் விசாரணை நடத்தப்பட்டது. அதாவது, அரசியலமைப்பு மீதான அச்சுறுத்தல் என்ற வாதத்தை காங்கிரஸ் கட்சி முன் வைத்ததே உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் அளித்ததற்கான காரணம். விடியவிடிய 3 மணி நேரம் விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்பதில் சிக்கல் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால், கூடவே நீதிபதிகள் சின்ன ‘செக்’ வைத்தார்கள்.
மறுநாள் காலை விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதிகள், எடியூரப்பா ஆளுநரிடம் சமர்பித்த கடிதங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். எடியூரப்பா அளித்த அந்த இரண்டு கடிதங்கள்தான் திருப்பு முனையாக அமையும் என்று அப்போதே சிலர் கூறினார்கள். ஆனால், இந்த அளவிற்கு திடீர் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று பாஜகவினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இருப்பினும், ஆளுநர் அழைப்பின்படி மறுநாள் காலை 9.30 மணிக்கே எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது சில முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அம்சங்கள்:-
உச்சநீதிமன்றம் அளித்த இந்த ஒவ்வொரு உத்தரவும் முக்கியமானதாக இருந்தது. ஆளுநர் அறிவித்தபடி 15 நாட்கள் அவகாசம் கிடைத்திருந்தால் கர்நாடக அரசியலில் தற்போதையை நிலைமை இப்படி இருந்திருக்காது. அடுத்த நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதை பாஜக கூட எதிர்பார்த்திருக்காது.
அதேபோல், ஆளுநர் நியமித்த தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போபையாவிற்கு எதிரான மனுவில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் முக்கியமானதாக அமைந்து விட்டது. ஒன்று, நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும், மற்றொன்று நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவல்களையும் செய்யக் கூடாது. வேறு அலுவல்களை செய்யக்கூடாது என்றால் எம்.எல்.ஏக்களை சபாநாயகரால் சஸ்பெண்ட் செய்ய முடியாது.
உச்சநீதிமன்றம் தலையிட்டு இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றால், கர்நாடக அரசியலில் இத்தனை திருப்பங்கள் நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகமே. சூழலும் முற்றிலும் மாறியிருக்கும். இன்னும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பு முடியவில்லை. ஆளுநரின் செயல்பாடு குறித்த விசாரணை இன்னும் நிலுவையில் தான் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் திரிணாமூல் எம்.பி ஓபிரையான் சொன்னபடி உச்சநீதிமன்றத்திற்கு தான் ‘மேன் ஆப் தி மேட்ச்’.