டிரெண்டிங்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடைமுறை என்ன?

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடைமுறை என்ன?

rajakannan

மத்தியில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக தெலுங்கு தேசம் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துள்ளன. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நடைமுறை என்ன என்பதை பார்க்கலாம்.

மக்களவை நடைமுறை விதிகள் 198-ல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நடைமுறை விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எழுத்துபூர்வமாக நோட்டீஸ் வழங்கலாம். சபாநாயகர் அந்த நோட்டீஸை சபையில் வாசித்து, தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் எழுந்து நிற்கும்படி கேட்கவேண்டும். அப்படி குறைந்தது 50 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தால், அந்தத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு சபாநாயகர் ஒரு நாளையும், நேரத்தையும் குறித்து தருவார். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வாக்கெடுப்பு நடைபெறும். 

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் பிரதமர் பதவி விலகவேண்டும். இதே போல் அரசும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வர முடியும். ஒரே நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும், நம்பிக்கை கோரும் தீர்மானமும் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டால், நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும். நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தால் பிரதமர் பதவி விலகவேண்டும். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க குடியரசுத் தலைவர் முயற்சிக்கவேண்டும். 

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைக்கமுடியும். அப்படி பரிந்துரைக்கப்பட்டால் மக்களவையை குடியரசுத் தலைவர் கலைக்கவேண்டும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் மக்களவையை கலைக்கும் பரிந்துரையை பிரதமர் அளிக்க முடியாது.