நடிகர் ரஜினிகாந்த் தான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்தார். அப்போது தன்னுடைய அரசியல் என்பது ஆன்மீக அரசியல் என்று கூறினார். ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வந்தாலும், அது என்ன ஆன்மீக அரசியல் என்று பலரும் குழம்பிப் போனார்கள். ரஜினியை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஏராளமான மீம்ஸ் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ஆன்மீக அரசியல் குறித்து விளக்கம் அளித்தார். ரஜினி பேசுகையில், உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதி, மத சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல். அரசியல் அல்லாமல் பார்த்தால், ஆன்மீகம் ஆத்மாவுடன் தொடர்புடையது” என்றார்.