டிரெண்டிங்

“நெசவாளர்களின் வீட்டுக்கடன் தள்ளுபடி” - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி

webteam

கூட்டுறவு வங்கிகளில் நெசவாளர்கள் வாங்கிய வீட்டுக்கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது வெற்றி விழா கூட்டம் போல இருக்கிறது. அவினாசி அத்திகடவு திட்டத்தை நிறைவு செய்து, நானே வந்து அதை துவக்கி வைப்பேன் என்றும் கோதாவரி-காவிரி திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழகம் இன்னும் வளம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.  

மேலும் தமிழகம் முழுவதும் விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்பட்ட 65 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்ட கடன் வாங்கிய அசல்,வட்டி போன்றவையும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் குடும்பம் மட்டுமே 40 டி.வி சேனல் வைத்திருக்கின்றனர். அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் வைத்திருக்கும் சேனல்களின் கட்டணத்தை குறைத்தாலே கேபிள் கட்டணம் குறைந்து விடும். அதிமுக ஆட்சியில் கேபிள் டி.வி கட்டணம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் போட்டி திமுக,அதிமுகவிற்கும் இடையேதான் என்று குறிபிட்ட அவர், ஸ்டாலின் மக்களை ஏமாற்றி குழப்பி கட்சியை வளர்க்க பார்க்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.